வேலையில்லாதவர்களுக்கு படித்த படிப்பிற்கேற்ற நல்ல வேலை கிடைக்க ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். கர்த்தாவே, நீர் என் ஜெபங்களைக் கேட்டு என் காரியங்களைக் கடந்த காலங்களில் ஜெயமாக்கினீர். அதற்காக உமக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். ஜெபத்தைக் கேட்கிறவரே. என் ஜெபத்தைக் கேட்டு என் குறைகளை நிவிர்த்தி ஆக்கும்படி கெஞ்சுகிறேன். உம்முடைய தயவுள்ள கரம் என்னைத் தாங்கி நடத்தவும். நான் நலமான வேலையிலே சேரவும். எனக்கு உதவி செய்யும். நான் படித்த படிப்பிற்காக நன்றி கூறுகிறேன். படிக்கவே முடியாத சூழ்நிலையிலே நான் படித்து முடிக்க எனக்கு உதவி செய்தீர். அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். என்னில் உள்ள அவிசுவாசம் நீங்க எனக்கு உதவி செய்யும். அன்பின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்களைக் கைவிடாத தேவனே, உம்மை முழுமனதோடு தேடுகிற என்னை ஆசீர்வதியும். உம்முடைய அன்பின் கரம் என்னைத் தாங்கி நடத்தும்படி கெஞ்சுகிறேன். அவிசுவாசத்தினால் என் உள்ளத்தில் தோன்றுகிற வீணான எண்ணங்கள், கலக்கங்கள். கவலைகள் முற்றிலுமாய் நீங்கட்டும். என்னைப்போல் படித்திருக்கிற பலர் இருப்பதால் எனக்கு நல்ல வேலை கிடைக்குமோ என்ற வீண் சிந்தனைகள் என் அவிசுவாசத்தைப் பெருகச் செய்கிறது. கவலைகளை உண்டாக்குகிறது. நம்பிக்கையற்ற நிலையை உள்ளத்தில் உருவாக்குகிறது. நான் சோர்வடையாது உம்மைத் துதிக்கத்தக்கதான உணர்வை என் உள்ளத்தில் தாரும். என் படிப்பிற்குரிய எல்லா பீஸ் தேவைகளையும் நீர் நேர்த்தியாய் சந்தித்தீர். நான் படித்து முடித்து இத்தனை காலம் வேலையில்லாதபடியினால் சோர்வடைகிறேன். ஒரு சின்ன வேலை கிடைத்தாலும் சேர்ந்து விடலாம் என்றால் ஒரு சின்ன வேலையும் கிடையாதிருப்பதால் கலங்குகிறேன். கர்த்தாவே, எனக்கு இரங்கும். நான் என் வீட்டாருக்கு மிகுதியாக பிரயோஜனமாயிருப்பேன் என்று எண்ணின என் எண்ணங்கள் வீணாகிக்கொண்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவே, என் அவல நிலையைப் பாரும். எனக்கு இரங்கும். என்னை ஆசீர்வதியும். எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே. ஆமென்.