அன்பின் தேவனே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உம்முடைய பாதத்திலே என்னைத் தாழ்த்தி ஜெபிக்கிறேன். கடந்த ஆண்டிலே நீர் எனக்குப் போதுமானவராக இருந்தீர், போராட்டங்கள். பிரச்சனைகள் வந்த போதெல்லாம் அதன் காரியங்களை நலமான விதத்தில் முடியச் செய்தீர். அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இந்த ஆண்டிலே. கர்த்தாவே உமது சமாதானமும், ஆசீர்வாதமும் நிறைந்து பெருகும்படி செஞ்சி நிற்கிறேன். அவர் உன் எல்லைகளைச் சமாதான முள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினாலே உன்னைத் திருப்தி யாக்குவேன் என்று சொன்னவரே. எனக்கு நீர் சொன்னபடியே சமாதானத்தை வெகுவாய் பெருகச் செய்வீராக. கர்த்தாவே, உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் என்று சொன்னீரே, என் பிள்ளைகளின் சமாதானம் பெரிதாயிருக்கட்டும். என்னுடைய சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன் என்று சொன்னவரே. உம் சமாதானத்தினால் எங்கள் தேசம் நிறைந்திருப்பதாக. கர்த்தாவே. ''உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடைவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர்." ஏசாயா 26:3 என்று சொன்னீரே, என் வாழ்க்கையிலே மெய்யான சமாதானத்தைப் பூரணமாய்த் தாரும். ஒவ்வொரு நாளும் என் கூடாரத்தில் மெய்யான சமாதானத்தையும், மேலான கிருபையையும் தந்து, என்னை ஆசீர்வதியும். நான் உமது வேதத்தை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர். உம்முடைய வேதத்தை நேசிக்கிறபடியால் அதனால் உண்டாகிற சமாதானத்தை நான் பெற்று மகிழ வழி நடத்தும், கர்த்தாவே. எந்த சிறிய பெரிய காரியமானாலும் என் சமாதானம் கெட்டுவிடாதபடி காத்துக் கொள்ளும், கர்த்தாவே. உம்முடைய ஜனங்களுக்குப் பெலன் தந்து சமாதானம் அருளி, ஆசீர்வதிப்பேன் என்று சொன்னீரே, எனக்கும். என் வீட்டாருக்கும் மெய்யான சமாதானத்தைத் தாரும். நான் ஆவியிலே அனல் கொண்டவனாய் மாற எனக்கு இரங்கும். கர்த்தாவே, பரத்திலிருந்து வருகிற ஞானத்தினால் என்னை நிரப்பும், சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள் என்று சொன்னபடி, நீர் அருளுகிற ஞானத்தினாலும், ஆசீர்வாதத்தினாலும், நிறைந்திருக்க எனக்கு உதவி செய்யும். உம்முடைய ஆசீர்வாதமானது வருடத்தின் துவக்கமுதல் முடிவு வரை பூரணமாய் என் எல்லைகளிலே இருக்கட்டும். என்னுடைய கூடாரமானது மெய்யான ஆசீர்வாதத்தினால் நிறையட்டும். நான் என்றும் உமக்குப் பிரியமாய் நடந்து, உம்முடைய சகல ஆசீர்வாதங்ளையும் சுதந்தரித்துக் கொள்ள உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.