கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
திருச்சியில் ஒரு குடும்பத்தாரோடு, அவர்களுடைய வீட்டில் மாதந்தோறும் கூட்டம் நடத்தி ஜெபித்து வந்தேன். தகப்பனார் அரசாங்க அலுவலராக இருந்தார். தாயார் ஆசிரியராக இருந்தார்கள். இவர்களுக்கு ஒரே மகன். அந்த மகன் 12 ம் வகுப்பு பாஸ் செய்தவுடன் Secondary Grade Teacher Training படிக்க வைக்க ஆயத்தம் செய்தார்கள். அந்நாட்களிலே வீட்டில் கூட்டம் நடந்து முடிந்த பின்பு, என்னப் படிப்புப் படிக்க போகிறான் என்று கேட்டேன். ஆசிரியர் பயிற்சிக்குப் படிக்க அனுப்பயிருக்கிறோம் என்றார்கள். அவனை ஏன் இன்ஜினியர் அல்லது மற்ற கல்லுாரியிலே படிக்க வைக்க வில்லை என்று கேட்டேன். அவர்கள் உடனே பணம் அதிகமாக செலவு ஆகும், இவனும் சரியாகப் படிக்க மாட்டான் . 12 ம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுக்கவில்லை என்று சொன்னார்கள். ஏன் ஒரே பையனைப் படிக்க வைக்கக் கூடாது என்று அவர்களுடனே பேசி, இன்ஜினியரிங் கல்லுாரியிலே படிக்கும் படியாக கூறினபடியால் அவர்களும் என்னுடைய ஆலோசனையின்படி இன்ஜினியரிங் கல்லுாரியில் சேர்த்தார்கள். அவர்களின் மகனோ நான்கு ஆண்டுகள் முடித்தும் 26 பாடத்தில் அரியர்ஸ் வைத்திருந்தான். அப்பா, அம்மாவிற்கு மிகுந்த வருத்தம். தாயார், இவ்வளவு பணத்தைச் செலவழித்தும், ஆண்டுகளையும் வீணாக்கி, பணத்தையும் விரயமாக்கி விட்டானே என்று கவலைப்பட்டார்கள். ஒரு நாளிலே அவனை அழைத்து, நீ கர்த்தரைத் தேடு, அவர் உன்னைக் கைவிடமாட்டார். நீ காலத்தைப் பிரயோஜனப்படுத்தி, வேதத்தை நேசித்து, அதைத் தியானிக்க இடம் கொடு என்று கூறி, அவனுக்காக ஜெபித்தேன். அவனும் உள்ளத்தில் உணர்த்தப்பட்டு இவ்வளவு நாட்களாய் நான் வீணாக்கி விட்டேனே என்று உணர்ந்து மீண்டுமாய் அரியர் எழுதுவதற்குத் தீர்மானம் செய்து, தேர்வை எழுதினான். கல்லுாரியில் பணி செய்த விரிவுரையாளர்கள் வேடிக்கையாய்ப் பார்த்த தோடு donation கொடுக்க வந்திருக்கிறான் என்றும் பேசிக் கொண்டார்கள். உண்மையாய்க் கர்த்தரைத் தேட ஆரம்பித்த அவனது வாழ்க்கையில் கர்த்தர் அற்புதம் செய்தார். உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் என்று சொன்ன அவனை தேவன், அவனது ஜெபத்தைக் கேட்டு, முதல் தேர்விலேலே 23 பாடங்களில் பாஸ் பண்ணினான். இது எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. மற்ற 3 பாடங்களையும் உடனடியாக தேர்வு எழுதி வெற்றி கண்டான். தேவனாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லை என்று உணர்ந்து, கர்த்தருக்குள் வாழ ஆரம்பித்தான். சில மாதங்களிலே அவனுக்கு நல்ல வேலை கிடைத்தது. கர்த்தருக்காக வாழவும் உழைக்கவும் தன்னை அர்பணித்தான்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்ளே, கடந்த ஆண்டுகளிலே நீங்கள் அடைந்த தோல்வி, குடும்பத்தில் சமாதானமற்ற நிலைமை, தொழிலே, வியாபாரத்திலே நஷ்டங்கள், பொருளாதாரத்தில் கஷ்டங்கள், வேதனையான வியாதிகள்- என்று வேதனையோடு வாழ்கிற அருமையான சகோதரனே /சகோதரியே, இன்று காத்தரைத் தேடவும், அவரோடு நல்ல உறவை உருவாக்கிக் கொள்ளவும் இந்தப் புதிய ஆண்டிலே தீர்மானம் செய்து, அதை நிறைவேற்ற முழுமனதாய் செயல்படுங்கள். கடந்த காலத்தின் கசப்புகள், தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறும்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
சகோ. c. எபனேசர் பால்