கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்த்தரின் பெரிதான கிருபையினால் இந்தப் புதிய ஆண்டிற்குள் பிரவேசிக்கச் செய்த தேவனுக்கு துதி ஸ்தோத்திரங்களைச் செலுத்துகிறேன். வருஷத்தின் ஆரம்பத்திலிருந்து வருஷத்தின் முடிவு வரை நமக்குத் தேவையான, நலமான, நன்மையான, ஆசீர்வாதமான, பெரிதான சந்தோஷத்திற்குரிய காரியங்களைக் கர்த்தர் நமக்குச் செய்வாராக. அனுதினமும் வாக்குத்தத்தமான தேவனுடைய வார்த்தையினாலே நம் கவலைகள் நீங்கவும், கண்ணீர் துடைக்கப்படவும், காயங்கள் ஆற்றப்படவும் கர்த்தர் அநுக்கிரகம் செய்கிறவராயிருக்கிறார். ஒவ்வொரு நாளும் இந்தத் திவ்விய வேதத்தைத் தியானிக்கிற மக்களுக்கு மெய்யான சந்தோஷத் தையும், சமாதானத்தையும், ஆறுதலையும் அருளுவதோடு, செல்லுகிற பாதையில் தவறும்போது எச்சரித்து, சீர்ப்படுத்துகிறதாயும் இருக்கிறது. கொடூரமான நோய்களை, ஜீவனைப் பறிக்கக்கூடிய போராட்டங்களை, பெலவீனங்களைப் பெருகச் செய்து, ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் மாற்றுகிற சகல துர்க்கிரியைகளையும் மேற்கொண்டு வாழ கர்த்தர் அதிசயமாய் நம்மை நடத்துவார். நாம் விரும்புகிற மேலான பெருக்கத்தை நம் வாழ்க்கையில், நம் குடும்பத்தில், தொழிலில், ஊழியத்தின் பாதையில் நிறைவாகப் பெருகச் செய்கிற தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவர் அனுதினமும் அருளும் நன்மைகள், நம் வாழ்க்கையைச் சந்தோஷப்படுத்துகிறதாயும், சமாதானத்துக்குள் நிலைப்படுத்துகிறதாயு மிருக்கிறது. சோர்ந்து போன மக்களைத் தேற்றி, அவருடைய மிகுதியான சத்துவத்தினாலும் பெலத்தினாலும் நிரப்பக்கூடியதாய் இருக்கிறது.
இவ்வுலக வாழ்க்கையிலே கடந்த ஆண்டுகளில் சொல்லமுடியாத பாடுகளை, துக்கங்களை, போராட்டங்களைச் சந்தித்தேனே என்று கலங்குகிற தேவப்பிள்ளையே, இந்த ஆண்டு உன் வாழ்க்கையில் நிறை வையும், மகிழ்ச்சியையும், சுகத்தையும் பெலத்தையும் கட்டளையிட்டு உன்னை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் வாக்கு கூறியிருக்கிறார். நான் வேலைக்குச் செல்ல முடியாதபடி பலவிதமான தடைகள், வெளிநாடு செல்ல முடியாதபடி விசா கிடைப்பதிலே மிகுதியான போராட்டங்கள் இருக்கிறதே என்று கலங்குகிற தேவப்பிள்ளையே, இன்று முதல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முன்னதாக வைத்துக்கொள். அவரை முன்வைக்கும்போது, எவ்விதமான தடையானாலும் தடைகளை நீக்குவார். 'தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.' மீகா 2:13ன் படி எவ்விதமான தடையாக இருந்தாலும் அதனை நீக்கிப் போடுவார். 'நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்கு வேன்.' ஏசாயா 45:2ன் படி அவர் தடைகளை நீக்கிப்போடுகிறவர் மாத்திரமல்ல, முன் செல்லுகிற பாதைகளிலே காணப்படுகிற எல்லா கோணலானவைகளையும் செவ்வை யாக்குவார். இன்று முதல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முன்னணியில் வைக்கும்போது, 'கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக் கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப் படுவதில்லை' சங். 16:8ன் படி அவர் உன் வலதுபாரிசத்தில் இருந்து அசைக்கப்படாத ஸ்திரமான வாழ்வைத் தருவார். இதுவரை நிரந்தரமான வேலை கிடைக்க வில்லையே, சில மாதங்களுக்குப் பின் வேறு இடத்தைத் தேடிச் செல்ல வேண்டியதிருக்கிறதே, ஊரை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய திருக்கிறதே, கர்த்தாவே எதுவரைக்கும் இந்தப் போராட்டமான வாழ்வு, குடும்பமாக, சமாதானமாக ஜீவனம் பண்ண முடியவில்லையே என்று கலங்குகிற தேவப்பிள்ளையே, இன்று கர்த்தர் நன்மையான காரியங்களைத் தருவதற்கு சர்வ வல்லமையும் உடையவராய் இருக்கிறார். ஆகவே இந்த நன்மைகளைப் பெற்றுக் கொள்ள நம்மை தகுதிப் படுத்துவோம், ஆசீர்வதிக்கப்படுவோம்.
I. கர்த்தர் அருளும் நன்மைகள்
1. நாவுகளின் சண்டைகளுக்கு விலக்கிக்காக்கிறார்
"உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! மனுஷருடைய அகங்காரத் துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்."சங்கீதம் 31:19, 20
இன்று மனிதர்களுடைய பொறாமையின் காரியங்களினாலும், போட்டியின் காரியங்களினாலும், தந்திரமான மந்திரமான காரியங்களை அவர்களின் வீழ்ச்சிக்காக, அழிவுக்காக, சுய நலத்தினால் அன்பற்ற துணிகரமான சூனியங்களைச் செய்கிறார்கள். நான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் முன்பாக இந்தச் சூனியங்களெல்லாம் மாய்மாலமான ஒன்றுமில்லாத காரியங்கள் என்று எண்ணினேன். ஆனால் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபிறகு, ஆவியின் வரங்கள் செயல்பட்ட போது, தனி நபரிலும், வியாபாரத்திலும், குடும்பங்களிலும், தொழிலுக்கும் விரோதமாக சூனியங்களைச் செய்து, அவர்களை ஒன்றுமில்லாமல் போகும்படி செய்கிற காரியங்களை அறியவும் உணரவும் முடிந்தது. அபிஷேகத்தைப் பெற்ற அன்றே என் வீட்டின் அருகே வசித்து வந்த ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார். அவரது சகோதரி நன்றாய் இருந்தவள் திடீரென்று பெலவீனமடைந்து மரித்துப்போயிருந்தாள். அந்தச் சகோதரன் வந்த போது, அவர்கள் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறிய டப்பாவிற்குள் தலைகீழாக நாம் வாசிக்க முடியாத எழுத்துக்கள் எழுதியிருக்கிறதைப் பார்க்கிறேன். இது உங்கள் குடும்பத்திற்கு விரோதமாய்ச் செய்யப்பட்ட சூனியம் என்று சொன்னவுடன், அந்த சகோதரன் தன் வீட்டிற்குப் போய் அந்த எழுத்து எழுதிய டப்பாவை எடுத்து வந்தான். அது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
வேறொரு நாட்டிலே நான் ஊழியங்களைச் செய்து கொண்டிருந்த போது, ஒரு சகோதரரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் உயர் படிப்பைப் படித்து அமெரிக்கா நாட்டில் வேலை இல்லாது கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். நான் சென்ற வீட்டிற்கு அவரும் ஜெபிக்க வந்தார். உங்களுக்குச் செய்யப் பட்ட சூனியத்தினால் சரியான வேலை உங்களுக்குக் கிடைக்கவில்லை என்று கூறி விட்டு, இந்தியாவிலிருந்து இந்த இடத்திற்கு நீங்கள் வரயிருந்தபோது, ஒரு வயதானவர் 5 ரூபாய் நோட்டை உன் பர்சை விட்டு எடுக்காதே என்று கூறி கொடுத்தாரா என்று கேட்டேன். அவருக்கோ மிகுந்த ஆச்சரியம். என் வீட்டின் அருகில் இருந்த வீட்டுக்காரர் நீங்கள் போகிற இடத்திலே உங்கள் பர்ஸ் எப்பொழுதும் பணத்தினால் நிறைந்திருக்கும் என்று 5 ரூபாய் நோட்டைக் கொடுத்தார். நான் இங்கு வந்த பிறகு அந்த பர்சிலே எந்தப் பணமும் இல்லாதபடி குறைவுபட ஆரம்பித்துவிட்டேன் என்றார். நான் அதை எடுத்து கிழித்துப்போட்டு விடுங்கள் என்று கூறினபோது, அவர் அதைச் செய்தார். சில நாட்களிலேயே அவருக்கு நிரந்தரமான வேலை கிடைத்தது. மிகுந்த சந்தோஷத்தோடு தன் சாட்சியைக் கூறினார்.
நாவுகளின் சண்டை என்பது சூனியங்களைச் செய்வது. 'அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி, மறைவுகளில் உத்தமன் மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்கைளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள். அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப் படுத்திக் கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனை பண்ணி, அவைகளைக் காண்பவர் யார் என்கிறார்கள்.' சங். 64:3-5ன் படி இவ்விதமான வாயின் சாபகரமான வார்த்தைகளினாலே தீங்கு செய்கிறவர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். தீங்கு செய்கிற ஆவிகளை அனுப்பி கெடுதியை விளைவிக்கிறார்கள். 'முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள். சங். 35:7ன் படி தாவீது, தனக்கு விரோதமாய் முகாந்தரமில்லாமல் செய்த சூனியத்தைக் கூறுகிறார்.
ஒருமுறை திருச்சிக்கு அருகே உள்ள ஒரு ஊரில் நற்செய்தி கூட்டம் ஒன்றில் செய்தி கொடுத்து விட்டு, முன் வந்த மக்களுக்கு ஜெபித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது புறமதத்தைச் சார்ந்த ஒரு சகோதரி தன் மகளை ஜெபிக்க அழைத்துக் கொண்டு வந்தார்கள். அந்த மகளோ பேச முடியாதவளாய் முன்னும் பின்னும் தன் சரீரத்தைத் தஞ்சாவூர் பொம்மையைப் போல் அசைத்துக் கொண்டிருந்தாள். அந்தத் தாயிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். அவர்கள் என் மகளை ஒரு குடிகார கண்டக்டர் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கேட்டார். நான் குடிகாரனுக்குத் தரமுடியாது என்று சொல்லிவிட்டேன். அப்போது அந்தக் குடிகாரன் மிகுந்த கோபத்தோடு இவள் எப்படி வாழ்ந்து விடுவாள் பார்க்கலாம் என்று சவால் விட்டுச் சென்றான். அதன்பின் வேறொரு பையனுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். ஆனால் திருமணத்தன்று திருமணம் முடிந்தபின் சில மணி நேரத்திலேயே துரிதமாய் அவள் போராட்டத்தினால் வேதனை அடைய ஆரம்பித்தாள். திருமணம் முடித்த மகன், சுகமானபின் மகளைக் கொண்டு வாருங்கள் என்று வீட்டிற்கு அனுப்பி விட்டார் என்று கூறினார்கள். அந்தத் தாயாரிடம் இயேசு கிறிஸ்து சுகமாக்க வல்லவர் என்று நம்புகிறீர்களா என்று கேட்டேன். அவர்கள் இயேசு கிறிஸ்துவை நம்பினபடியால்தான் அழைத்து வந்தேன் என்றார்கள். அவர்களுக்காக ஜெபித்த போது, என் முகத்துக்கு எதிராக ஒரு பெரிய அல்சீஷன் நாய் வந்தது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அதைக் கடிந்து கொண்டேன். அந்த நாயின் உருவமானது கொஞ்சம் கொஞ்சமாக சிறியதாகி அப்படியே மறைந்து விட்டது. அவ்வாறே மறைந்த போது, அந்த மகள் தெளிவும் சுகமும் அடைந்து பேச ஆரம்பித்தாள். மிகுந்த சந்தோஷத்தோடு கூட்டம் முடிந்து வீடு வந்தேன்.
நானும் வீட்டிலே படுத்துத் துாங்க ஆரம்பித்தேன். திடீரென்று அந்த நாயின் உருவம் எனக்கு எதிராக வந்தது. என் மனைவியை எழுப்பி, இருவரும் சேர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தோம். ஜெபித்தபின் நாயின் உருவம் மறைந்து போனது. அந்த இரவிலேயே நாய்கள் எதைக் குறிக்கிறது என்று வேதத்தை ஆராய ஆரம்பித்தேன். நாய்கள் பரலோகத்திற்குச் செல்ல முடியாது, புறம்பே இருக்கும் என்று வெளி. 22:15ன்படி அறிய முடிந்தது. அத்துடன் பிலி. 3:2ல் 'நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்' என்று பார்க்க முடிந்தது. சங். 22:16ல் 'நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது' என்று தாவீது கூறியதைப் பார்க்க முடிந்தது. அதோடு சங். 22:20லே நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் (power of dogs) தப்புவியும் என்று தாவீது வேண்டினான். நாய்கள் என்பது சூனியத்திற்குப் பயன்படுத்தப் படுகிற ஒரு துஷ்ட மிருகமாயிருக்கிறது. இதைத் தரிசனம், சொப்பனங் களிலே கர்த்தர் வெளிப்படுத்தி, நம்மைத் திடப்படுத்தி ஜெபித்து மேற்கொள்ள உதவி செய்வார்.
2.ஆவிக்குரிய, இம்மைக்குரிய ஆசீர்வாதங்களை அருளும் நன்மை
"அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஒடிவருவார்கள்..." எரேமியா 31:12
கர்த்தர் நமக்கு அருளும் நன்மையான காரியங்களில் ஒன்று தேவைகளைச் சந்திப்பது. கர்த்தர் நம்மீது கரிசனைக் கொண்ட தேவன். அவர் சமுகத்தில் நாம் வரும்போதெல்லாம் ஆவிக்குரிய ஆசீர்வாதங் களையும், இம்மைக்குரிய செல்வத்தின் ஆசீர்வாதங்களையும் நமக்கு அருளுகிறார். கோதுமை என்பது தேவனுடைய வார்த்தைகள். எண்ணெய் என்பது அபிஷேகத்தைக் குறிக்கிறது. திராட்சரசம் ஆவியின் வரங்களைக் குறிக்கிறது. கன்றுக்குட்டிகள், ஆட்டுக்குட்டிகள் இவைகள் இவ்வுலகத்திற் குரிய செல்வத்தைக் குறிக்கிறது. கர்த்தர் அருளும் நன்மையானது நாம் குறைவுபடாத நல்வாழ்வு வாழ ஏற்றக் காரியத்தை ஏற்ற நாளில் செய்ய நம்மைத் தகுதிப்படுத்துகிறது. இந்த நன்மையெல்லாம் பரத்திலிருந்து ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து நமக்கு அருளப்படுகிறது. இவ்விதமாய் நமக்கு அருளப்படும் நன்மையினாலே, நம்முடைய ஆத்துமா நீர்ப் பாய்சலான தோட்டத்தைப் போல் செழிப்பும், சிறப்புமுள்ளதாய் மாறிவிடும். 'அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்து போவதில்லை. அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங் கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.' எரேமியா 31: 12, 13ன் படி இந்த நன்மையானது நம் வாழ்க்கையை மாற்றி, துக்கத்தை நீக்கி, சஞ்சலங்களை நீக்கி விடுகிறது. இந்த நன்மையானது எல்லா சூழ்நிலையிலும் நமக்கு உதவுகிறதாய் இருக்கிறது. அவர் அருளும் நன்மையானது ஞானத்தினாலே நம்மை நிறைத்து விடுகிறது. நமக்கு எதிராக யாராவது பேசும்போது, கேள்விகளைக் கேட்கும்போது, கர்த்தர் அருளும் ஞானத்தைக் கொண்டு ஏற்ற பதிலைச் சொல்ல வழி நடத்துகிறது.
ஒருமுறை ஒரு தேசத்திலே ஊழியர்கள் மத்தியிலே செய்தி கொடுக்க உதவி செய்தார். அந்தக் கூட்டத்தின் முடிவில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம், உங்களுக்கு யார் உதவி செய்கிறார்கள், இவ்விதமாய் பயணம் செய்கிறீர்களே, உங்களுடைய பணத்தேவை யெல்லாம் யார் சந்திக்கிறார் என்று என்னிடம் கேட்டார். எனக்கு bank account ஒன்று பரலோகத்தில் இருக்கிறது. எனக்கு எவ்வளவு பணம் தேவையோ, அதற்குரிய செக்கைக் கொடுத்து நான் வாங்கிக் கொள்கிறேன் என்று சற்று விளையாட்டாகவும் கூறினேன். உடனே அவர் எங்களுக்கும் அப்படித்தான். American United Methodist Church ஒரு ஏஜென்ட்டாக இருந்து அதைப் பெற்றுத்தருகிறது என்று கூறினார். கர்த்தருடைய ஆவியானவர் ஒரு நீரூற்றைக் காண்பித்து, இதில் எப்படி தண்ணீர் ஊறி வருகிறது என்று கேள்வி கேட்க நடத்தினார். அவர் தெரியாது என்றார். அந்த நீரூற்றிலிருந்து எனக்கு எவ்வளவு தேவையோ, அதை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினேன். இவ்விதமாக நாம் பேச வேண்டியவை களைப் பேச, பதில் சொல்ல வேண்டியவைகளுக்குப் பதில் சொல்ல, ஆவியின் நன்மையினால் முடிசூட்டுகிறார். அதினதின் காலத்தில் நேர்த்தியாய்ச் செய்கிற தேவன் குறைவுபடாதபடி நிறைவைத் தந்து நாம் கலங்காதிருக்க நம்மை நடத்துகிறார்.
3. குணமாக்கும் நன்மை
"நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமை யினாலும் அவிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்த படியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்."அப்போஸ்தலர் 10:38
குணமடைவது என்பது நம் ஆவி, ஆத்துமா, சரீரத்திலே பூரண சுகமடைவதாகும். ஒரு மனிதன் குணமாகும்போது, தன் சரீர சுகத்தை அனுபவிக்க முடியும். அத்துடன் ஆவியில் காணப்பட்ட குழப்பங்கள், கவலைகள், இன்னும் பலவித ஜென்ம சுபாவத்தின் தன்மைகள் நீங்கி கிறிஸ்துவின் பண்புகளினால் நாம் நிறைந்து விடுகிறோம். சரீரத்துக் கடுத்த நோய்களை நாம் சந்திக்கும்போது மருத்துவரை அணுகி, மருத்துவ ஆலோசனையினாலே சுகம் பெறுகிறோம். ஆத்துமாவிலே வருகிற நோய்கள் எப்போதுமே துக்கத்தைத் தரக்கூடியதாய் இருக்கிறது. யாரைக் கண்டாலும் கேட்க விரும்பாத சொற்களைப் பேசுவது, பரிகாசம் பண்ணுவது, தவறான தீர்மானம் செய்வதற்கு வழி நடத்துவது போன்ற செயல்கள் இருக்கும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இன்று அநேகரின் வாழ்க்கையிலே குணமடையாதபடி இருப்பதினால், ஆவியின் கனிகள் இல்லாத போராட்டமான வாழ்க்கையாய் மாறிவிடுகிறது. எதைக் கேட்டாலும் வேதனையான பதில்களைச் சொல்வது, மற்றவர்கள் மனது நோகும்படி காரியங்களைச் செய்வார்கள். இன்று சபைகளிலே, சங்கங்களிலே குணமடையாத நிலையினால் பிரிவினைகள், வழக்குகள், மற்றவர்களை அற்பமாக எண்ணுவது, மற்றவர்கள் செய்கிற காரியங்களை இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மைக் குணமாக்கும் அங்கிகரியாது, கேள்வியும் கிண்டலுமாக பேசுகிற காரியம் நிறைவாய் போது எல்லா சூழ்நிலையிலும் மனரம்மியமாய் வாழத்தக்க தான வாழ்வைப் பெற்று விடுவோம். வேலை ஸ்தலத்திலும், வீட்டிலும், அக்கம் பக்கத்திலும், ஆராதிக்கிற மக்களோடும் கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கிற கருவிகளாய் மாறிவிடுவோம். வீணான தர்க்கமும், மற்றவர்களை அற்பமாய் எண்ணி குற்றம் சாட்டும் தன்மைகளும் நம்மை விட்டு நீங்கி விடும். பெருமை, பொறாமை அகன்று தாழ்மையும் அன்பும் நிறைந்து விடும்.
தாவீது கோலியாத்தை வென்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்தான். ஸ்திரீகள் ஆடல் பாடலுடன் புறப்பட்டு மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். அந்த ஸ்திரீகள் சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறை முறையாய்ப் பாடினார்கள். இந்த வார்த்தைகள் சவுலுக்கு விசனமாயிருந்தது . அதினால் அவன் எரிச்சல் அடைந்தான். தாவீதுக்கு பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள். இன்னும் ராஜாங்கம் மாத்திரம் குறைவாக இருக்கிறது என்று சொல்லி அந்த நாள்முதற் கொண்டு சவுல், தாவீதைக் காய்மா காரமாய்ப் பார்த்தான். மறுநாளில் சவுலுக்குள் தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி இறங்கியது. சவுலின் உள்ளத்தில் தோன்றின பொறாமையின் நிமித்தம், கீத வாத்தியங்களை வாசித்துக் கொண்டிருந்த தாவீதைக் கொல்ல ஈட்டியை எறிந்தான். சவுலினால் தாவீதைப் புகழ்ந்து போற்றின காரியத்தை ஏற்றுக்கொள்ள முடியாதபடியால் தீங்கின் ஆவி அவனுக்குள் வருவதற்கு காரணமாயிற்று. சவுல் தன் ஜீவகாலமெல்லாம் தாவீதைப் பகைத்து, அவனைக் கொன்றுபோட முயற்சி செய்தான். பழிவாங்கும் சுபாவம் அவனுக்குள் பெருகிற்று.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, சவுலைப்போல இவ்விதமான சுபாவங்களோடு வாழ்கிற மக்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, குணமாக்கி ஆசீர்வதிக்கிறவராயிருக்கிறார். என்னை குணமாக்கும் என்று அவரை நோக்கிக் கேட்கும்போது, ஜெபத்தைக் கேட்கிற தேவன் குணமாக்கு கிறார். 'என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்' சங். 30:2ன் படி அவரை நோக்கிக் கூப்பிடும்போது குணமாக்குகிறார்.
நன்மைகளைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
"நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய். அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்." உபாகமம் 30:8,9
இன்று நம்முடைய வாழ்க்கையிலே ஆதிமனிதனின் கீழ்ப்படியாமை யின் பாவத்தினாலே யாவரும் வழி விலகி பாவம் செய்தவர்களாய் இருக்கிறோம். அநேக காரியங்களில் பாவம் என்று அறியாது பாவம் செய்து விடுகிற மக்கள் ஏராளம். கண்களின் இச்சைகளுக்கும் மாமிசத்தின் இச்சைகளுக்கும் இடம் கொடுத்து பெருமையோடு வாழ்கிற மக்களையும் பார்க்கிறோம். அநேக நேரங்களிலே இதில் என்ன இருக்கிறது என்று தங்களையே தேற்றி, பாவ வாழ்க்கையிலே அழிந்து கொண்டிருக்கிறார்கள். எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்று அறியாதவர்களாய் தீதான காரியங்களைச் செய்து பணத்தைச் சம்பாதித்து, இடம் பொருள் வாங்குகிற வர்களாய் இருக்கிறார்கள். ஒரு நாட்டில் ஊழியங்களைச் செய்யும்போது, என் இளவயதின் பாவங்களை நினையாதிரும் என்ற தலைப்பின்கீழாக செய்தியைப் பகிர்ந்து கொண்டேன். செய்தி முடிந்தவுடன், சிறந்த உடையணிந்து, விலையேறப்பெற்ற காரை உடைய ஒரு சகோதரி ஜெபிக்க வந்தார். பணம் சம்பாதிப்பதற்காக தன் சரீரத்தை விற்று சம்பாதித்தக் காரியத்தைக் குறித்து மிகவும் கலங்கினார். தவறான காரியத்தைச் செய்து விட்டேன் என்று அறிக்கை செய்ததோடு என் மகளும் என்னைப் போல தவறு செய்கிறாள் என்று மிகவும் கலங்கினாள். அந்தச் சகோதரி பாவத்தினிமித்தம் மனஸ்தாபப்பட்டு, உணர்த்தப்பட்டு மனம் திரும்புவதற்கு ஒப்புக்கொடுத்தாள்.
அருமையான சகோதரனே, சகோதரியே, தேவனுக்கும் நமக்கும் நடுவாக பாவங்கள், அக்கிரமங்கள், மீறுதல்கள் தடையாக இருக்கிறது. உண்மையாய் அறிக்கை செய்து, அதை விட்டுவிடும்போது கர்த்தர் நமக்கு இரக்கம் செய்கிறார். அப்பொழுது உன் கைகள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் நன்மை உண்டாக ஆசீர்வதிப்பார்.
2. கர்த்தரைத் தேட வேண்டும்
"சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.'' சங்கீதம் 34:10
சிங்கக்குட்டிகள் ஒருநாளும் பட்டினி கிடக்காதபடி தேவன் அதை மேன்மையாய் சிருஷ்டித்திருக்கிறார். பெண் சிங்கம் குட்டி போடுவதற்கு முன்பாக, பெண்சிங்கத்திற்கும், குட்டிகளுக்கும் தேவையான ஆகாரத்தினால் கெபியையும், அதற்கு முன்பக்கம் உள்ள இடத்தையும் ஆண்சிங்கம் நிரப்பி விடும். குட்டி போட்டவுடன், அதற்கும், குட்டிகளுக்கும் போதுமான ஆகாரம் கெபியிலேயே இருக்கும். ஆகாரம் முடியும்போது, குட்டிகள் வெளியே வரவும், தானாகவே ஆகாரத்தைப் பெலனடைந்து விடும். பட்டினி கிடப்பது கிடையாது. அவைகள் குறைவுபட்டு பட்டினி கிடக்கலாம். ஆனல் கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது. இன்று நாம் முழு மனதோடு, முழு ஆத்துமாவோடு, முழு பலத்தோடு கர்த்தரைத் தேடும்போது, நன்மையான காரியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
3. ஸ்தோத்தரிக்க வேண்டும்.
"நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது." சங்கீதம் 103:5
ஸ்தோத்திர பலியிடுகிறவன் தேவனை மகிமைப்படுத்துகிறவனாய் இருக்கிறான். உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திரபலி நிறையும்போது. கர்த்தர் வாக்குக் கொடுத்திருக்கிற ஆசீர்வாதமான காரியங்கள் வாழ்வில் நடைபெறும். அக்கிரமங்களை மன்னித்து, நோய்கள் குணமாக்கப்படுகிற சிலாக்கியம் பெறுவோம். இரக்கங்களினாலும் கிருபையினாலும் முடிசூட்டி நம்முடைய வாயைத் திருப்தியாக்குகிற நன்மையைத் தருகிறார். தேவன் அருளின சொல்லிமுடியாத ஈவுகளுக்கு ஸ்தோத்திரம் செலுத்தும் போதெல்லாம் அவரின் நன்மையைப் பெறுவதற்கு வழியாக அமைகிறது.
4. கர்த்தரை மேய்ப்பராக ஏற்றுக்கொள்ளவேண்டும்
"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்."
"என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்...' சங்கீதம் 23:1, 6
நல்மேய்ப்பராக வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் ஏற்றுக் கொள்ளும்போது, நாம் அவரின் பாதுகாவலையும் பராமரிப்பையும் பெறுகிறோம். அவர் புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்க ளண்டையில் கொண்டு போய் விடுவார். எல்லா சூழ்நிலைகளிலும் பயத்தை நீக்கி, ஆத்துமாவைத் தேற்றி, ஜீவ வசனமாகிய வார்த்தையாகிய கோலினாலும் தடியினாலும் நம்மைப் பெலப்படுத்துவார். சத்துருக்கள் மத்தியிலே மேன்மைப்படுத்தி நம் தலையை அபிஷேகம் பண்ணுகிற தேவனாய் இருக்கிறார். அத்துடன் நம் வாழ்க்கையிலே நன்மையும் கிருபையும் சதாகாலங்களிலும் தொடரும்படி செய்வார்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்து இயேசுவின் பணியில்,
சகோ. C. எபனேசர் பால்