கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.
சில வருடங்களுக்கு முன் நான் வசித்துவரும் பகுதியில் எல்லாத் திசைகளிலும் தண்ணீர் நிரம்பிய, தேங்கிய நிலை. சாலைகள் மூழ்கினநிலை. சில தினங்கள் சென்றன. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்தது. மேட்டுப் பகுதிகள் தெரிந்தன. பள்ளங்களில் தண்ணீரும் சேறும் சேர்ந்து அதிக பள்ளமானது. நான் எப்பொழுதும் செல்லும் பாதை அதிக சேதமடைந்து விட்டது. வாகனம் சென்றால் தூக்கி துாக்கிப் போடும் நிலை. இந்நிலையில் அடுத்துள்ள மற்றொரு மாற்றுப் பாதையில் செல்ல ஆரம்பித்தேன். ஒருநாள் மாலை இந்தப் பாதையிலும் செல்ல பிரச்சனை ஏற்பட்டது. ஒரு நல்ல தெரிந்த வீட்டாரின் தோட்டத்தின் முன் பகுதியில் உள்ள தென்னை மரத்தின் மட்டைகள் பாதையில் செல்ல இடையூராக அமைந்து விட்டது. கீழே இறங்கி வீட்டாரிடம் சென்று மட்டைகளை வெட்டச் சொல்லலாமா? அல்லது நாமே அம்மட்டைகளை இழுத்து முறித்துவிடலாமா? என்ற கேள்வி உள்ளத்தில் எழும்பிற்று.
மனிதரை அல்ல. எனக்கு ஒத்தாசை வரும் பர்வதமாகிய உம்மை நோக்கிப் பார்க்கிறேன். என் பாதையிலுள்ள தடையை நீர் நீக்கி, என் வழியைச் செவ்வைப்டுத்துகிறவர் நீரே என்று கர்த்தரின் கரத்தில் எல்லாவற்றையும் விட்டு விட்டு சமாதானத்தை உள்ளத்தில் பெற்றேன். பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல கர்த்தரின் ஆவியினால் ஆகும் என்ற கர்த்தரின் வாக்கின்படி சகலமும் செம்மையாகும் என்று நம்பி எதைக் குறித்தும் கலங்காது கர்த்தரைப் புகழ ஆரம்பித்தேன். என் உள்ளம் இப்பாதை காரியத்தைக் குறித்து கலங்காது கர்த்தரின் நன்மையை நினைந்து மகிழ ஆரம்பித்தது. அடுத்த நாள் மாலை அவ்வழியில் சென்றேன். அவ்வீட்டாரே தென்னை மட்டைகளை வெட்டி இருந்தனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை ஆட்கள் சரிசெய்து கொண்டு இருந்ததையும் கண்டேன்.
அற்பமனிதனின் உலகப்பாதையில் ஏற்பட்ட போராட்டங் களை, பிரச்சனைகளை ஏற்ற வண்ணம் சீர் செய்யும், சரி செய்யும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார். நேற்றும், இன்றும், என்றும் மாறாத இயேசு கிறிஸ்து நம் வாழ்வின் பாதையில் உள்ள எல்லாக் கஷ்டங்களையும், கண்ணீரின் காரியங்களையும் சரி செய்து நம்மை மகிழ்ச்சியினால் இடைகட்டுவார். சகாயம் செய்யும் கர்த்தர் நம் தடைகளை நீக்குவார். உனது வேலை, திருமணம், உயர்வு, வேலை நிரந்தரம், லைசன்ஸ் எடுப்பதில், வீடு கட்டுவதில், வாடகை பெறுவதில் உள்ள தடைகளை நீக்கி, சுகமும், சமாதானமும் நிறைந்து வாழ கர்த்தர் இன்று உதவி செய்வார்.
கலங்காது, கர்த்தரைக் குறை பேசாது, அவரையே நம்பி துதிப்போம். கைவிடாது காக்கும் கர்த்தர் கவலை தீர்த்து நம் காரியங்களை ஜெயமாக மாற்றுவார். உடைந்த நம் உள்ளத்தை தம் மகிமையின் பிரசன்னத்தினால் நிறைவாக்குவார். இன்று கர்த்தர் மேல் நம் பாரத்தை வைத்து ஆறுதலும் சமாதானமும் அடைவோமாக.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
மறைந்த சகோ. C. எபனேசர் பால்.
(இது 1993 ஏப்ரல் மாதம் வெளியிட்டது)