அன்பின் தேவனே. இந்த நல்ல வேளைக்காக உம்மைத் துதிக்கிறேன். உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஏறெடுக்கிற இந்த ஜெபத்தைக் கேட்டு அதிசயமாய் நடத்தும்படி ஜெபிக்கிறேன். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்துவார் என்ற வாக்குறுதி நிறைவேறவும், தொடர்ந்து கவலைகள் நீக்கப்பட்டு நாங்கள் செய்யும் காரியங்களில் உள்ள தடைகள், சோர்வுகள் நீக்கப்பட்டு, விடுதலையோடும் சுதந்தரத்தோடும் செய்து முடிக்கவும் உதவி செய்யும். "அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்" என்று சொன்ன கர்த்தாவே, அடியேன் செய்யும் காரியத்தையெல்லாம் ஆசீர்வதியும். அடியேன் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் வெற்றியுள்ளதாக மாற்றும். போதுமான பண உதவியையும், தேவையான ஆட்களையும், நீர் தந்து உதவி செய்வீராக. கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருபோதும் கலங்காதபடி உதவி செய்யும். எனக்கு மிகுந்த பொறுமையையும் நீர் தந்து, "என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிட மாட்டேன்" என்று சொல்லி வைராக்கியமாக உம்மைப் பற்றிக் கொள்ளும் உள்ளத்தைத் தாரும். மனிதருக்குப் பயந்தல்ல, உமக்குப் பயந்து எல்லாவற்றையும் செய்ய கிருபை தாரும். என்னிடத்தில் பயின்றவர்கள் எனக்கு உதவியவர்கள் இப்போது பகைவராக மாறியிருக்கிறார்கள். அவர்கள் தூற்றுகிற வார்த்தைகள் என்னால் தாங்கமுடியவில்லை. ஆனாலும் கர்த்தாவே, எனக்குள் மன உற்சாகத்தை ஏற்படுத்தி, இன்றுமுதல் காரியங்களை வாய்க்கச் செய்யும். சில காரியத்தில் நான் அற்பமா யெண்ணப்படுகிற நிலைமைகளை மாற்றி, ஒரு பெரிய ஆசீர்வாதமான வாழ்வை பெற்றுக் கொள்ள உதவி செய்யும். வாழ்க்கையிலுள்ள எதிர்ப்புகளை மாற்றும். மந்தமான நிலைகளை மாற்றும். நீர் அப்படிச் செய்கிறபடியால் உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். எல்லாவற்றையும் நன்மையாக முடியப் பண்ணின கர்த்தாவே, என்னுடைய எல்லா முயற்சிகளிலும் நான் நன்மையானவைகளைக் காண உதவி செய்யும். தொடர்ந்து என்னை வழி நடத்தும். உம்முடைய ஆலோசனையினால் ஆறுதலடைய உதவி செய்யும், காத்தருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.